search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்னூஞ்சல் திருவிழா"

    • முதலாவதாக பிறந்த 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் 158 பேர் விரதம் இருந்து வந்தனர்.
    • பொன்னூஞ்சல் விழா அன்று அமராவதி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள ரத்தின மூர்த்தி சுவாமி கோவிலில் வழிபட்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது சங்கரண்டாம்பாளையம். இந்த கிராமத்தில் உள்ள ரத்தின வேணாடுடையார் அரண்மனையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவாதிரை நாளில் 'பொன்னூஞ்சல் விழா' கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொங்கு வேளாளர் சமூக குடும்பங்களில் முதல் பெண் குழந்தைகளை பொன்னூஞ்சலில் ஆட்டும் சீர் தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது.

    சோழ மன்னர் இரண்டாவது கரிகாலன் தன் மருமகன் ஆட்டன் அத்தி என்ற சேர மன்னனை கருவூரில் அரியணை ஏற்றினார். கரிகாலனுக்கு படை உதவி செய்த பெரியகுல தலைவன் வேணாடருக்கு நன்றி தெரிவிக்க மும்முடி மற்றும் வேணாடுடையார் பட்டம் கொடுத்து தன் மகள் ஆடும் பொன் ஊஞ்சலை வேணாடருக்கு கரிகாலன் அளித்ததாக வரலாறு உள்ளது.

    இந்தநிலையில் இந்த ஆண்டு திருவாதிரை தினத்தன்று சங்கரண்டாம்பாளையம் ரத்தின வேணாடுடையார் அரண்மனையில் பொன்னூஞ்சல் திருவிழா நடைபெற்றது. இதற்காக அரண்மனை முழுவதும் வாழை, மாவிலை தோரணங்களால் அழகுப்படுத்தப்பட்டு இருந்தது.

    அரண்மனையின் 35-வது பட்டக்காரர் பாலசுப்பிரமணிய வேணாவுடையார் தலைமையில் நடைபெற்ற பொன்னூஞ்சல் திருவிழாவில் ஊட்டி, பாலக்காடு, சத்தியமங்கலம், திருப்பூர், கோவை, ஒட்டன்சத்திரம், ஈரோடு, சென்னிமலை, தாராபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்த விழாவுக்காக சீர் செய்ய வேண்டிய கொங்கு வேளாளர் சமூக குடும்பங்களில் முதலாவதாக பிறந்த 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் 158 பேர் விரதம் இருந்து வந்தனர். பொன்னூஞ்சல் விழா அன்று அமராவதி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள ரத்தின மூர்த்தி சுவாமி கோவிலில் வழிபட்டனர். பின்னர் குழந்தைகளுக்கு பட்டாடைகள், ஆடை அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு 22 வகை சீர்வரிசைகளுடன் காத்திருந்த தாய்மாமன்கள் பெண் குழந்தையின் நெற்றியில் தங்க பட்டயம் கட்டி அப்பெண்ணை உறவினர் சூழ தங்களது தோளில் சுமந்து ஊர்வலமாக ரத்தின வேணாடுடையார் அரண்மனைக்கு அழைத்து வந்தனர். அங்கு குழந்தையை பொன்னூஞ்சலில் அமர வைத்து பாடல் பாடி ஊஞ்சலை ஆட்டினர். இந்த பொன்னூஞ்சல் விழா தாய்மாமனின் உறவையும், பெண் குழந்தைகளை போற்றும் வகையிலும் நடத்தப்பட்டு வருவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஊஞ்சலாடிய குழந்தைகளுக்கு தாய்மாமன்கள் வசதிக்கேற்ப சீர் செய்து மகிழ்ந்தனர். பின் விருந்து படைத்து சீர் செய்த தாய்மாமனை குழந்தைகள் ஏழடி நடந்து வந்து ஊருக்கு வழியனுப்பி வைத்தனர்.

    சோழன் கரிகாலன் உரிமையளித்த சீர்மரபை கொங்கு வேளாளர் சமூக குடும்பத்தினர் பெருமையாக கொண்டாடுகின்றனர். சங்கரண்டாம்பாளையத்தில் 3 முதல் 5 ஆண்டுக்கு ஒரு முறை இவ்விழா நடைபெறும். கொரோனா காரணமாக விழா நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்டுள்ளது.

    ×